ஞாயிறு, 29 நவம்பர், 2015

திருவருகைக்கால முதல் ஞாயிறு நாம் செய்ய வேண்டியதென்ன? -

நொவெம்பர் – 29 - 2015 -
திருவருகைக்கால முதல் ஞாயிறு
நாம் செய்ய வேண்டியதென்ன? -
லூக்கா21:25-28, 34-36

“ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவே இவ்வுலகின் அரசர்” எனக் கடந்த வாரத்தில் பெருவிழா வெடுத்து மகிழ்ந்த நாம், 2015 வருட திருவருகைக்கால முதல் ஞாயிறு தினத்திலே காலடி பதித்து, கிறிஸ்து பிறப்பு பண்டிகையை ஆரம்பிக்கும்போது, நமதாண்டவர் இயேசுவின் மறுவருகையினை மீண்டுமொருமுறை ஞாபகப் படுத்த நற்செய்தி (லூக்கா21:25-28,34-36) அழைக்கின்றது.

திருவருகைக்காலத்தை, நமதாண்டவர் இயேசுவின் மறுவரு கையை எதிர்கொள்ள மனதார ஆயத்தப்படுத்தும் காலமென வாய்கூசாது கூறலாம். உண்மையான கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகள் டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகையை, இவ்வுலக வரலாற்றுத் தடயங்களுக்கே மாபெரும் சவால் விடும், எல்லாம் வல்லவரது மனித அவதார மகிமையின் பெருவிழாவெனக் கருதுகின்றனர்.

திருவருகைக்கால முதல் ஞாயிறு தினத்தில் எமக்குத் தரப்பட் டுள்ள நற்செய்தி, ஆண்டவர் இயேசுவின் அரசாட்சிக்குள் நுழைய, (லூக்கா21:25-28,34-36) எம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறதென நாம் வேறுவிதமாகப் பொருள்கொள்ளலாம். தீர்ப்பிட வரும் இறைவன் முன், மனத் தைரியத்தோடு நிற்க நாம் தகுயோடு வாழுகின்றோமா?.

பெத்தலகேம் சிற்றூரில் மனித உடலெடுத்து, கன்னி மரியின் மடியில் தவழ்ந்த இயேசு பிரான், கல்வாரியில் அடைந்த சிலுவை மரணத்தினால், மனிதரான எம்மைப் பாவங்களிலிருந்து மீட் டெடுத்தார். தமது மாட்சிமை மிக்க உயிர்ப்பினால், எம்மை விண்ணரசுக்கு உரியவராக்கினார். எம்மைத் தீர்ப்பிட இறுதிநாளில் வருவாரென திருவருகைக்கால நற்செய்தி வாசகங்கள் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

உறுதியான நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கெடுத்து, திருப்பீடத்தில் மனித உடல் எடுக்கும் ஆண்டவர் இயேசுவின் திருவிருந்துப்பந்தியில் தகுதியான உள்ளத்தோடும், பக்தி மரியாதை யுடனும் அமரும் ஒவ்வொரு திருப்பலியும் நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் மறுவருகையை நினைவு படுத்துவதாகவே அமைகிறதென்று பல கத்தோலிக்க விசுவாசிகள் கருதுகிறார்கள்.

இன்றைய நாட்களில், நமதாண்டவர் இயேசுவின் பிறப்பு விழா விற்கான ஆயத்தங்கள் வர்த்தக மயமாக்கப்பட்டு, வெளியரங்க, மற்றும் களியாட்ட ஆடம்பரங்களோடு நின்று விடுவது மிகவும் மனம் வருந்துவதற்குரிய செயலாக இருக்கின்றது. ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசி என்று பெருமையோடு அழைக்கும் எம் ஒவ்வொருவரினதும் ஆயத்தங்கள் எவ்வாறு இருக்கின்றது?

கொடிய யுத்தத்தில் அகதி முகாம்களில் தமது வாழ்வு என்ன வாகுமோவென ஏங்கித் தவித்த எமது தாய், தகப்பன், குழந்தைகள், முதியோர், இளைஞர், யுவதிகள், மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டுமல்ல, கணவனை இழந்து தமது குடும்பங் களுக்குத் தலைமை தாங்கியுள்ள இளவயது விதவைகள் மட்டில் எங்களது கிறிஸ்மஸ் பண்டிகையின் ஆயத்தம் எத்தகையது?

அமைதியின் அரசர் பிறந்தது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மாத்திரம் அமைதி கொண்டு வருவதற்கல்ல, என்ற ஆழமான சிந்தனையுடன் 2015ம் வருட திருவருகைக் காலத்தில் எம்மை ஆயத்தப்படுத்துகிறோமா? எமது மீட்பரும் இரட்சகருமானவரது மறு வருகைக்காக தயார் நிலையில், (எண்ணையோடும் விளக்குகளோடும்) ஆயத்தமாகவுள்ளோமா?

அன்றைய கிறிஸ்துவுக்கு பட்டும் பவளமும் தரவெனப் பாராள் வோர் காத்திருக்க, பசுவின் கொட்டிலே போதுமென்று பிறந்தார். ஏழை இடையர்களுக்கே முதலில் தரிசனமானார். கந்தல் துணியில் போர்த்தப்பட்டாலும் ஏழ்மை இவ்வுலகில் இருக்கக்கூடாதென எமக்கு உணர்த்தி தனது பிறப்பாலே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

நமதாண்டவர் இயேசுக்கிறிஸ்து சமதர்மமே தமது போதனை (யோவான் 6:1-15). என்பதனை எமக்குப் போதித்துள்ளார். கிறிஸ்து பிறப்பின் உண்மைத் தன்மையை உணராமல், கிறிஸ்து பிறப்பைக் களியாட்டம் கேளிக்கையென மாற்றிவிட்டோம். இறைமகன் இயேசு எதற்காக மனுவுரு எடுத்துப்பிறந்தார் என்பதை மறந்து ஒழுக்கச் சீர்கேடுகள், வன்முறைகளே புதிது புதிதாகப் பிறக்கின்ற நிலையில் நாம் வாழுகின்றோம்.

கிறிஸ்து இயேசுவின் பெயரால், எமக்குள் சாதிக்கொரு கோயில், சமூகத்திற்கு ஒரு கோயில் எனக் கூறுபோட்டுள்ளோம். நமதாண்டவர் இயேசுவின் திருப்பெயரைச் பெயரைச் சொல்லிக்கொண்டு பொருளாதாரச் சுரண்டல்கள் எம்மிடையே இல்லை என்போமா? இந்நிலையில் திரும்பவும் கிறிஸ்து இயேசு எம்மிடையே பிறக்க வேணடுமா?

மீட்பராம் இயேசுக்கிறிஸ்து திரும்பவும் பிறக்கமாட்டார். மாறாக, அவர் மறுபடியும் அதிகாரத்தோடு நீதி தீர்ப்பவராக வருவாரென அழியா வார்த்தைகளைக்கொண்ட நற்செய்தி ஏடுகள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் நீதியின் அரசரை நேர்கொண்டு சந்திப்பதற்கு இத் திருவருகைக் காலத்தில் எம்மை நாமே ஆயத்தம் செய்வோம்.

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான எமது ஆயத்தம் ஆடை அலங் காரங்களோடு, வேடிக்கை வினோத களியாட்டங்கள் அல்ல. மாறாக, எமது உள்ளார்ந்த மனங்களில் பிறப்பெடுக்கும் பாவ நாட்டமுள்ள தீய, தவறான சிந்தனைகளை மாற்றுவோம். நல்ல பாவப்பொறுத்தல் அருட்சாதனத்தைப் பெற்றுக் கொள்வோம். கிறிஸ்து இயேசு எமது சின்ன இதயமெனப்படும் மாட்டுத் தொழுவத்தில் நிட்சயம் பிறப்பார். எமக்குப் புது வாழ்வைத் தந்தருள்வார்